கத்தாருடனான பிரச்சனை குறித்துப் பேசி தீர்க்க வேண்டும் – குவைத் அமீர் அறிக்கை.

கத்தாருடனான பிரச்சனை குறித்துப் பேசி தீர்க்க வேண்டும் – குவைத் அமீர் அறிக்கை.

குவைத்: கத்தார் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கிடையேயான பிரச்சனை கடந்த 30 மாத காலமாக நீடித்து வருகிறது. இனியும் இந்த பிரச்சனைகளைத் தொடராமல் உடனடியாக பேசி தீர்க்கப்பட வேண்டும் என்று குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனைகள் காரணமாக வளைகுடா ஒத்துழைப்பு சபை (ஜி.சி.சி) யிலுள்ள ஆறு நாடுகளின் ஒற்றுமை பெரிதும் பலவீனப்பட்டிருப்பதாக குவைத் பாராளுமன்றத்தின் புதிய பதவிக் காலத்தின் தொடக்க அமர்வில் அமீர் ஷேக் சபா பேசினார்.

கத்தார் நாடு தீவிர குழுக்களுடன் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி 2017 ஜூன் மாதம் முதல் ஜி.சி.சி உறுப்பினர்களான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் எகிப்தும் சேர்ந்து கத்தார் மீது கடல் வழி, தரைவழி மற்றும் வான்வழிகளைத் தடை செய்தது. கத்தார் பலமுறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

“நம் ஜி.சி.சி சகோதரர்களிடையே வெடித்த இந்த சர்ச்சை இனியும் தொடர்வது நல்லதற்கு இல்லை” என்று ஷேக் சபா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் முதல் முறையாகப் பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்த பிரச்சனைகளால் நமது ஜிசிசி நாடுகளின் திறன்கள் பலவீனப்பட்டுள்ளதென்றும் நாம் மேற்கொள்ள இருக்கும் சாதனைகளுக்குத் தடையாக உள்ளதென்று பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் ஷேக் சபா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். அரபு நாடுகளின் பிராந்திய முன்னேற்றங்களுக்கும் தேசிய ஒற்றுமைக்கு அமீர் அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாட்டை அவர் தாக்கியுள்ளார். இது சமூகத்தில் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: