பணம் படுத்தும் பாடு (கவிதை)

பணம் படுத்தும் பாடு

உழைப்பென்னும் நான்கெழுத்துத் தாயின் சேயே!

உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே

மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய்

மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய்

தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த்

தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய்

பிழைப்போரும் உன்பின்னா லோட நாட்டம்

பிச்சையெடுப் போருமுன்றன் மீதே நோட்டம்

பொருளாதா ரப்போட்டி நீண்ட நாளாய்ப்

போர்களையும் தூண்டிவிடும் தூண்டு கோலாய்

இருளான நிலைமைக்கு மாக்கி விட்டாய்

இறைபக்தி எண்ணங்கள் போக்கி விட்டாய்

வருமானம் ஈட்டுதலை வெறியா யாக்கி

வறியோரைக் கொல்லுதலே குறியா யாக்கி

ஒருமான மில்லாத கூட்டம் சேர்த்தாய்

ஒழுக்கத்தைப் புதைத்திடவே செய்தாய் நீயே

விரும்பிப்போ னாலும்நீ எம்மை விட்டு

விலகித்தான் போகின்றாய்; விலகிப் போனால்

விரும்பித்தான் வருகின்றாய் உன்றன் மாய

வித்தைகளை எங்கிருந்து கற்றாய் நீயும்?

நிரம்பத்தான் ஆசையுடை உடுத்திக் கொண்டாய்

நிம்மதியை உளம்விட்டே எடுத்து விட்டாய்

வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்

வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்

 

-கவியன்பன் கலாம்

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: